கானகத்தில் காணாமல் போனவர்!
சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர் சஞ்சய் ராதாகிருஷ்ணன். அங்குள்ள தேசியக் கல்வி நிறுவனத்தில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிகிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன் அங்குள்ள பத்திரிகைகளின் முக்கிய செய்திகளில் இவரின் பெயர் அடிபட்டது, காரணம், மலையேற்றம் செய்வதற்கு அந்தப் பிராந்தியத்தின் உயர்ந்த சிகரமான கம்போடியாவின் ஃப்னோம் அவுரால் மீது ஏறச்சென்றவர் காணமல் போனதுதான். ஒருவழியாக மீண்டு வந்துவிட்ட அவரின் அனுபவம்!
''15 வயதிலிருந்தே மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகிறேன். மலேசியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, வியட்நாம், குரோசியா என பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டு
மலைகளில் மலையேறும் குழுக்களுடன் இணைந்து மலையேற்றத்தில் ஈடுபடுவதுண்டு. கம்போடியாவின் அவுரால் மலை 5,000 அடிக்கும் மேலே உயரமானது. நானும் எனது கம்போடிய நண்பர் ஒருவரும் ஜுன் 29 அன்று அதில் ஏறத் திட்டமிட்டிருந்தோம். அன்று நல்ல மழை பெய்யவே திட்டத்தை மறுநாள் தள்ளி வைத்து அடுத்த நாள் காலையில் கிளம்பினோம். நல்ல பருவநிலை இருந்தாலும் முதல் நாள் கடுமையான மழை காரணமாக ஆங்காங்கே காட்டாறுகள் தென்பட்டன. ஜூலை 6-ம் தேதி எனது பிறந்தநாள். அன்று எனக்கு பட்டமளிப்பு விழாவும் இருந்தது. என் காதலி அன்று இரவு பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். நான் கட்டியிருந்த கடிகாரத்தில் திசைகாட்டி இருந்தது. என்னிடம் சேட்டிலைட் போன் இருந்தது. பூமியில் எங்கு இருக்கிறோம் என்று காட்டும் ஜி.பி.எஸ் கருவி இருந்தது. இவ்வளவு ஏன்... நான் பட்டமளிப்பு விழாவில் அணிந்துகொள்ளப்போகும் கவுனும் என்னிடம்தான் இருந்தது.
30-ம் தேதி மதியம் 1.30 மணி இருக்கும். அடர்ந்த காட்டுக்குள் திடீரென்று கால் வழுக்கி பத்து மீட்டர் பள்ளத்தில் விழுந்துவிட்டேன். சடசடவென எங்கிருந்தோ வந்த காட்டாறில் எனது உடமைகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. எனது கையில் இருந்த வாட்ச்சும், 1 1/2 லிட்டர் தண்ணீர் பாட்டிலும், 20 பிஸ்கெட்டுகள் மற்றும் பட்டமளிப்பு விழாவில் போடும் கவுனும் மட்டுமே என்னிடம் இருந்தது. மொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்து பேட்டரி பழுதாகிவிட்டது. என் கம்போடிய நண்பர் நான் பின்னால் வந்துகொண்டிருக்கிறேன் என்று நம்பிச் சென்றுவிட்டார். திக்குத் தெரியாத காட்டில் நான் தனித்து விடப்பட்டேன். கம்போடிய காடுகள் விஷப்பூச்சிகளுக்கும் கொடிய பாம்புகளுக்கும் பெயர் பெற்றது. பள்ளத்தில் இருந்து ஒரு வழியாக எழுந்து, தவறவிட்ட பாதையை அடைவதற்கு இரண்டு மணி நேரம் முயற்சி செய்து தோற்ற பிறகே, காட்டுக்குள் தொலைந்துவிட்டதை உணர்ந்தேன். நானாக ஏதாவது ஒரு ஊரையோ அல்லது உதவிக்கு வருபவர்கள் என்னைக் கண்டுபிடிக்கும் வரை உயிரைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமே என்னால் செய்ய முடிந்த ஒன்று என முடிவெடுத்தேன். நம்பிக்கையான எண்ணங்களை மனதுக்குள் ஏற்படுத்திக்கொண்டேன். பயந்து அலறுவதால் யாரும் வந்து காப்பாற்றப் போவதில்லை என்றும் எனக்குத் தெரிந்துவிட்டது.
முதல் இரண்டு நாட்கள் வெட்ட வெளியான இடங்களில் ஹெலிகாப்டர் வழியாக என்னைத் தேடி வருவார்கள் என்று காத்திருந்தேன். இரண்டு நாட்கள் கடந்த பின்னர் எந்தவித உதவியும் இனி நம்பிப் பயனில்லை. எனவே நகர்ந்துகொண்டே இருப்பது என முடிவெடுத்தேன். ஒரு மலையில் ஏறி இறங்கியபோது ஒரு சிறிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அதன் கரையோரமாகவே சென்றால் கண்டிப்பாக ஏதாவது ஓர் ஊருக்குப் போகும் என்று ஊகித்தேன். இடையில் தெரிந்த மரங்களில் பழங்கள் இருந்தன. ஆனால் எனக்கு உண்பதற்கு விருப்பமில்லை. அதை சாப்பிட்டு அலர்ஜி ஏற்பட்டுவிடுமோ என்கிற பயம்தான் காரணம்.
தண்ணீரைக் குடித்துக்கொண்டு காலை ஆறு மணி முதல் மதியம் வரை நடப்பேன். தினமும் மதிய வேளைகளில் மழை பெய்யத் தொடங்கும். பின்னர் மாலை ஆறு மணி முதல் காலை வரை பாறைகளுக்கு அடியில் கவுனைப் போர்த்திக்கொண்டு அந்த 18 டிகிரி குளிரில் தூங்குவேன். இப்படி நான்கு நாட்கள் நடந்த நிலையில் கடந்த ஜூலை 6-ம் தேதி, ஒரு மோட்டார் சைக்கிளைக் கண்டேன். அது காட்டில் விளைந்து இருக்கும் மலை வாழைகளை வெட்ட வந்தவருடையது. அவர் உடனடியாக சாப்பிட வாழைப்பழங்கள் கொடுத்து, அருகில் இருந்த கிராமத்தில் உள்ள அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அரிசி சாதமும் அணிந்துகொள்ள ஜீன்ஸ் பேன்ட்டும் கொடுத்தார். என்னைப் பொறுத்தவரை பெரிய சாகச அனுபவமாக இருந்தாலும் என் பெற்றோரையும் குடும்பத்தாரையும் கலங்க வைத்துவிட்டேன்' என்றார்.
0 comments:
Post a Comment