Saturday, 26 July 2014

கேள்விக்கென்ன பதில்?

கேள்விக்கென்ன பதில்?
எத்தனை முறைதான் நாமே பிரபலங்களைப் பேட்டி கண்டு கேள்விக் கணைகளைத் தொடுப்பது? ஒரு பிரபலத்துக்கு இன்னொரு பிரபலத்திடம் கேள்வி கேட்க ஏராளமானவை இருக்குமே.
'தி.மு.க தலைவர் கலைஞரிடம் நீங்கள் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்’ இதுதான் டாபிக் என்றதும், குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறார் முன்னாள் தி.மு.க எம்.பி-யும் இந்நாள் ஜெயலலிதா விசுவாசியுமான ஜே.கே.ரித்தீஷ். 'கேள்விதானே... கேட்டுடுவோம். ஆனா, அடுத்த வாரம் என்னுடைய கேள்விகளுக்கு கலைஞரோட பதிலையும் போட்டீங்கனா நல்லா இருக்கும்’ என்றபடி கேள்விகளை அடுக்கினார்.
 இலங்கையில் உள்ள தமிழர்கள் கொல்லப்படும்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசின் கூட்டணியில் இருந்துகொண்டு எதுவும் செய்யாமல், எல்லாம் முடிந்த பிறகு, 'டெசோ’ அமைப்பு உருவாக்கப்பட்டது தாங்கள் அறியாமல் செய்ததா? அரசியல் அனுபவத்தால் செய்ததா?’
 ஐந்துமுறை முதல்வராக இருந்ததை மறந்துவிட்டு காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளைப் பற்றி அறிக்கை விட்டுக்கொண்டிருப்பது தங்களது கட்சியின் ஆதாயத்திற்காகவா? தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவா?
 தமிழகத்தின் மின் பற்றாக்குறை பற்றி அறிக்கை விடும்போது, உங்களுக்கும் உங்கள் மகன் ஸ்டாலினுக்கும் மனச்சாட்சி கேள்வி கேட்கிறதா? இல்லையா?’
 'தாங்கள் ஆட்சியில் இருக்கும்போதுதான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்கிற விஷயம் தங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?’
 'தமிழகத்தில் மாண்புமிகு முதல்வர் அம்மாவின் மூன்று ஆண்டு பொற்கால ஆட்சி நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தி, கட்சிக்காரர்களையும் தமிழக மக்களையும் துன்புறுத்திக்கொண்டிருப்பதன் நோக்கம் என்ன?’
 'கடந்த வார நாளிதழ் ஒன்றில் 'அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து அ.தி.மு.க-வைத் தோற்கடிப்போம்’ என்று கூறியிருப்பது, தங்களின் வலிமையா? இயலாமையா?’
 'தமிழக முதல்வர் அம்மாவின் சீரிய முயற்சியால் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்காகத் தாங்கள் எந்த முயற்சியுமே எடுக்காமல், 'இது என் முயற்சியில் வந்தது’ என்று கூறுவதுதான் தங்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாடா?’
 'திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 'ஸ்பெக்ட்ரம் ஊழல்’ வளர்ச்சியா வீழ்ச்சியா?’
 'தாங்கள் ஆட்சியில் இருந்தபோது கோவை குடிசை மாற்று வாரியக் கட்டடங்கள் இரண்டு பூமிக்குள் புதைந்தது உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்க, தற்போது ஸ்டாலினை வைத்து மவுலிவாக்கம் கட்டட விபத்தை மையப்படுத்தி 'மலிவான’ பேரணி நடத்தியதன் நோக்கம்தான் என்ன?’
 ' 'கிளப்’களில் வேட்டிக்குத் தடை விதித்ததால் அது தமிழர்களின் பண்பாட்டை அவமதிக்கும் செயல் என்று கருதி, 'தடை விதிக்கும் கிளப்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்’ என்று கூறிய தமிழக முதல் வருக்கு, வேட்டி கட்டிய தமிழரான நீங்கள் நன்றி சொல்வீர்களா? மாட்டீர் களா?’
 கேள்விகளை முடித்தவர், மீண்டும் ஒருமுறை 'தம்பி... கலைஞரோட பதிலுக்காக நான் வெயிட் பண்றேன்’னு போட்டுக்கோங்க என்று முடித்துக்கொண்டார்!

1 comment: