
வேட்டி கட்டியவர்களைக் கிளப்புகளில் உள்ளே விடாதது சுயமரியாதையைப் பாதிக்கிறது, பண்பாட்டை அவமானப்படுத்துகிறதுனு தமிழக அரசு தீர்மானம் கொண்டுவந்ததெல்லாம் ஓகேதான். ஆனால், பண்பாடும் சுயமரியாதையும் வேட்டியில மட்டுமாங்க இருக்கு? வேட்டி கட்டின அமைச்சர்கள், ஒன்றியச் செயலாளர்கள் எல்லாம் ஜெயலலிதா காலில் பொத்து பொத்துனு விழுறாங்களே, இதெல்லாம் பண்பாட் டுக்கும் சுயமரியாதைக்கும் எதிரானதுனு ஒரு தீர்மானம் கொண்டுவர மாட்டாங்களா?


'ஜூன் 1-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது’னு அறிவிச்சாங்க ஜெயலலிதா. ஆனா எந்த வருஷத்தில் இருந்துனு அவங்க அறிவிக்காததாலோ என்னவோ, இன்னமும் ஆங்காங்கே மின்வெட்டு தொடருது. அதற்குப் பிறகு இப்போ நடந்த கூட்டத்தொடர்ல எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் இந்தக் குற்றச்சாட்டை எழுப்ப, அதற்கு பதில் அளித்துப் பேசிய நத்தம் விஸ்வநாதன் ''அப்படில்லாம் மின்வெட்டு கிடையாது. ஆங்காங்கே தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாத்தான் கரன்ட் போயிருக்கும்''னு ஆணித்தரமா அடிச்சுப் பேசியிருக்கார். அப்புறம் அவரே ரெண்டு நாள் கழிச்சு, ''டிசம்பர் மாதத்தில் இருந்து மின்வெட்டு இருக் காது''னு அறிவிச்சிருக்கார். யப்பா சாமி, சான்ஃபிரான்சிஸ்கோ படத்தை சப் டைட்டில் இல்லாமப் பார்க்கிற மாதிரியே இருக்கு!

'இசை எங்கே இருந்து வருது தெரியுமா?’னு கேட்டா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. ஆனா 'க்ரைம் எங்கே இருந்து வருது?’னு கேட்டா, சொல்ல முடியும். சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் ரோந்து வாகனத்தில் இருந்து ஒருவர் பெட்ரோல் திருடியிருக்கார். யாருங்க அந்த கில்லாடினு கேட்கிறீங்களா? அந்த ரோந்து வாகனத்தோட டிரைவர்தான். ஏதோ இவர் மட்டும்தான்னு இல்லை. மாசத்துக்கு 140 லிட்டர் டீசல் ரோந்து வாகனங்களுக்குத் தர்றாங்களாம். அதில் மிச்சமாகிற டீசலைத் தனியாருக்கு நிறைய போலீஸ் வித்ததாக் கண்டுபிடிச்சிருக்காங்க. 'கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’னு துணை கமிஷனர் ராஜேந்திரன் எச்சரிச்சிருக்கார். எப்படி இருக்கு பார்த்தீங்களா?


'வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ§க்கு வேலை இல்லை என்பது டைட்டிலைப் பார்த்தவுடனே உங்களுக்குப் புரிந்திருக்கும். நண்பனின் பிறந்தநாள் பார்ட்டி. ஆளுக்கு 2,000 ரூபாய் கொண்டுவர வேண்டும். தனுஷோ, அம்மா அப்பாவிடம் ஆட்டையைப் போட்டுக்கொடுத்த 200 ரூபாயை மட்டும் கொண்டுபோகிறார். நண்பர்களும் பெருந்தன்மையாக அதை அனுமதித்து சரக்கடிக்கிறார்கள். அப்புறம் நடந்துவரும்போது வழிமறிக்கும் போலீஸ்காரர், ''என்ன குடிச்சிருக்கீங்களா, கேஸ் போடவா?'' என்று கேட்கிறார். ''நாங்க நடந்துதானே வர்றோம். வண்டியில் வந்தாதானே டிரங்க் அண்ட் டிரைவ் கேஸ் போடுவீங்க?'' என்று சட்டம் ஒரு இருட்டறையில் சரக்கு விளக்கு கொளுத்திக் கேள்வி கேட்கிறார்கள் நண்பர்கள். ''என்கிட்டவே சட்டமா? பப்ளிக் நியூசென்ஸ் கேஸ் போடுவேன்'' என்கிறார் போலீஸ்காரர். நண்பர்களிடமோ போலீஸ்காரருக்குக் கொடுக்கப் பணம் இல்லை. அப்புறம் என்ன, தனுஷிடம் இருந்த 200 ரூபாயை போலீஸ்காரரிடம் கொடுக்கிறார்கள். 'மற்றவர்கள் வைத்திருந்த பணத்தைவிட தனுஷிடம் இருந்த 200 ரூபாய்க்குத்தான் பவர் அதிகம்’ என்பதை உணர்ந்துகொண்ட நண்பர்கள் தனுஷைத் தூக்கிக்கொண்டாடுகிறார்கள். (எப்படி ரூபாய் மதிப்பு ஏறுச்சு பார்த்தீங்களா?) உடனே தனுஷ§ம் 'வாட் எ கர்வாட்?’னு ஒரு பாட்டுக்குக் குத்தாட்டம் போடுகிறார். (அதுக்கு என்னங்க அர்த்தம்?)

அப்புறம் என்ன, டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி நிஜமாகவே பப்ளிக் நியூசென்ஸ் நடக்கிறது. அதற்கான லைசென்ஸ்தான் அந்த 200 ரூபாயா? அவ்வ்வ்வ்!

மற்ற ஹீரோக்கள் எல்லாம், படம் ஹிட் அடிக்கிறதோ, ஃப்ளாப் ஆகிறதோ... படம் ரிலீஸ் ஆகி அதன் மூலம் லைம் லைட்டில் இருப்பார்கள். ஆனால் படங்கள் ரிலீஸ் ஆகாமலே எப்போதும் எலுமிச்சை வெளிச்சத்தில், அதாங்க லைம்லைட்டில் இருக்கிற ஒரே ஹீரோ சிம்புதான். அவ்வப்போது கிசுகிசுக்கள், சர்ச்சைகள், அதிரடி ஸ்டேட்மென்ட்கள் ஆகியவற்றின் மூலமே செய்திகளில் அடிபடுவார் சிம்பு. இதற்கு முன் 'லிட்டில் சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தைத் துறந்தவர், பிறகு தன் பெயரை எஸ்.டி.ஆர் என்று மாற்றிவைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியோ அமிஞ்சிக்கரை யுனிவர்சிட்டியோ தந்த பட்டமான 'யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தைப் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டார். இப்போது அதைத் துறப்பதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். ஆக மொத்தம் தனுஷ்... வேலையில்லா பட்டதாரி. சிம்புவோ... பட்டமே இல்லாத பட்டதாரி. வாட் எ கர்வாட்?


நாடாளுமன்றக் கூட்டத்தொடரோ, சட்டமன்றக் கூட்டத்தொடரோ தொடங்கப்போகுதுனு நியூஸ் பேப்பர்ல நியூஸ் வந்தவுடனே, மறுநாள் என்ன செய்தி வரும்னு நமக்கெல்லாம் நல்லாத் தெரியும். 'எதிர்க்கட்சிகள் அமளி, நாடாளுமன்றம் முடங்கியது’ (அதென்ன அடகுவெச்ச நகையாய்யா, முடங்குறதுக்கு?), 'சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு’ இந்தச் செய்திகளைத்தானே காலங்காலமாப் படிக்கிறோம். இதுல என்ன மேட்டர்னா, சட்டமன்றத்தில் அ.தி.மு.க அல்லாத மற்ற கட்சி எம்.எல்.ஏ-க்கள் கணிசமா இருக்காங்க. ஒண்ணு அவங்களா வெளிநடப்பு செஞ்சுடறாங்க, இல்லைனா, கூண்டோட வெளியேத்திடுறாங்க. ஆனா பார்லிமென்ட்ல நிலைமை தலைகீழ். அங்கே ஆளும் கட்சிதான் தனிப்பெரும்பான்மை. எல்லா எதிர்க்கட்சிகளையும் சேர்த்தாக்கூட, கணிசமான எம்.பி-க்கள் இல்லை. ஆனாலும் சுலபத்தில் நாடாளுமன்றத்தை 'முடக்கி’டறாங்க. எப்பதான் நிமிர்த்தப்போறாங்களோ?
0 comments:
Post a Comment