சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இது இப்படியே தொடர்ந்தால் இனிவரும் காலத்தில் என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்று யோசித்தபோது...
'விமான நிலைய மேற்கூரைபோல்
தன் சருகுகுளை உதிர்க்கிறது மரம்’
என்று ஏதாவதொரு கவிஞர் கவிதை எழுதக்கூடும்!

இன்றைய தங்க நிலவரம் போல், 'இன்றைய மேற்கூரை நிலவரம்’ ஒன்றை தினசரிகள் வெளியிட்டு, விமான நிலையத்தின் மேற்கூரையின் எந்தப் பகுதி இன்றைய தினம் இடிந்து விழும் வாய்ப்புள்ளது என்பது பற்றி பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை தரக்கூடும்!

விரைவில் நூறாவது முறையாக இடிந்து விழும் மேற்கூரைக்கு, நமது பிரதமர் தலைமையில், வெளிநாட்டு அதிபர்கள் முன்னிலையில் கோலாகலமாக பாராட்டு விழா நடத்தப்படக்கூடும்!

யுனெஸ்கோ அமைப்பினால் தேர்வு செய்யப்படும் 'உலகின் பாரம்பரிய சின்னங்கள்’ பட்டியலில், சென்னை விமான நிலைய மேற்கூரையும் சேர்க்கப்படக்கூடும். மேலும் தொடர்ச்சியாக மேற்கூரை இடிந்து விழாதபடி, விமானங்கள் தரையிறங்கும்போதும் மேலெழும்பும்போதும் அதிக அதிர்வில்லாமல் மென்மையாக செயல்படும்படி யுனெஸ்கோவினால் வலியுறுத்தப்படக்கூடும்!

காரணம் என்னவென்றே கண்டறிய முடியாமல் தொடர்ச்சியாக இடிந்து விழுந்தபடியிருப்பதால், விமானங்களையும் கப்பல்களையும் விழுங்கும் 'பெர்முடா முக்கோணம்’ போல் சென்னை விமான நிலைய மேற்கூரையும் மர்மமான ஒன்றாக அகில உலக பூகோள ஆய்வாளர்களால் பதிவு செய்யப்படக்கூடும்!

சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை விழுந்து விடாதபடி முட்டுக் கொடுக்க ஆயிரக்கணக்கான கம்புகள் வாங்குவதற்காக மத்திய அரசால் சில ஆயிரம் கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடங்கப்படும். அங்கே நிலை நிறுத்தப்படும் கம்புகளை இடித்து விடாதபடி சுற்றுப் பாதையில் செல்லும்படி பொதுமக்கள் எச்சரிக்கப்படக்கூடும்!

பிரபல ஜோதிடர்களின் அறிவுரைப்படி, விமான நிலையத்தின் மேற்கூரையை மேற்பகுதியில் இல்லாமல், அண்டர் கிரவுண்டுக்குள் தலைகீழாக மாற்றியமைத்து வாஸ்து பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு முடிவு செய்யக்கூடும். மத்திய அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டிக்க, ராமர் பாலப் பிரச்னை போல சென்னை விமான நிலைய மேற்கூரைப் பிரச்னையும் தேசிய அளவிலான தேர்தல் பிரச்சார பிரச்னையாக உருவெடுக்கக்கூடும்!
0 comments:
Post a Comment